Tuesday, October 2, 2007

ஒரு லட்ச ரூபாயில் கார்!

டாடாவின் ஒரு லட்ச ரூபாய் கார் கனவு, இந்தியாவில் பல நடுத்தர குடும்பங்களுக்கு நனவாகப் போகிறது. இந்த கார் எப்படியிருக்கும்? என்ற கற்பனை, கார் வாங்க விரும்புவோருக்குள் இப்போதே சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். அடிப்படையில் ஒரு மோட்டார் பைக்கில் செய்யக் கூடிய தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சிறப்பாக இருக்க வேண்டும். காரின் கட்டமைப்பு உறுதியுடனும், நான்குபேர் அமரக் கூடிய வகையிலும் இந்த கார் இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. உயர்ந்த சீட்டுகளை அமைத்து, உள்பகுதியில் அதிக இடவசதி இருக்கும். எளிமையாகவும், எளிதாகவும் இருக்க பின் பகுதியில் இன்ஜின் இருக்கும். நகரின் குறுகிய ரோடுகளில் வளைந்து நெளிந்து செல்ல இக்கார் உதவுவதோடு, எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.இரட்டை சிலிண்டர், 30 பிஎச்பி திறன் வாய்ந்த இன்ஜின் அமைந்திருக்கும். 'சிவிடி' கியர் பாக்ஸ்சுடன் பின் பக்க சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும். டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் கார் தயாரிக்க அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கான வடிவமைப்பில் இன்ஜினியர்கள் இறங்கி விட்டனர். எதை, எங்கெங்கு குறைக்கலாம்...உற்பத்தி செலவு எங்கு குறையும், எந்த இடத்தில் சிக்கனத்தை பயன்படுத்தலாம், உறுதி தன்மையை உயர்த்த வேண்டிய பகுதிகள் என அலசி ஆராய்ந்தனர். தொழில்நுட்ப ரீதியாக சிக்கனமும், அதேசமயம் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களையும் ஏற்படுத்த திட்டமிட்டனர். பாஷ் நிறுவனம், புதிதாக தயாரித்துள்ள நவீன தொழில்நுட்பத்திலான எரிபொருள்'இன்ஜெக்ஷன்' சிஸ்டம் இதில் அறிமுகமாகிறது.இந்த டாடா இன்டிகா 'சூப்பர் மினி' கார், ஜனவரியில் காட்சி பொருளாக இருக்கும். எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என ஆவலோடு கார் நிபுணர்கள் காத்திருக்கின்றனர்.டில்லி, பிரகதி மைதானத்தில் 2008 ஜனவரியில் நடக்கும் கண்காட்சியில் இந்த கார் இடம் பெற வேண்டும் என கார் வாங்குவோர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன், இதே எதிர்பார்ப்பை டாடா இன்டிகா கார் ஏற்படுத்தியது. பிற கார்களை விட அடக்க ஒடுக்கமாக, உள்ளே அதிக இடவசதி உள்ளதாக அறிமுகப்படுத்தப்பட்டது இன்டிகா. அமோக வரவேற்பை ஏற்படுத்திய இந்தக் காரை போன்றே, ஒரு லட்ச ரூபாய் காரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

1 comment:

மங்களூர் சிவா said...

டாடா ஒரு லட்ச ரூபாய் கார் ஒரு லட்சத்தை விட அதிகமாக இருக்கும் என ரதன் டாடாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

வரட்டும் பார்ப்போம்.